துறையூரில் சக்கரம் கழன்று தறி கெட்டு ஓடிய பேருந்தால் பரபரப்பு..!
பேருந்து
பெரம்பலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து 36 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர். பஸ்சை அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் மற்றும் வினோத் ஆகியோர் ஓட்டி வந்தனர். பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைகுளம் கரை பகுதியில் நேற்று இரவு சென்றபோது பஸ்சின் முன்பகுதி சக்கரம் திடீரென கழன்று ஓடியது.
சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அந்த சக்கரம் ஓடியது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் உள்ள குளத்தை நோக்கி சென்றது. இதனை அறிந்து பஸ்சில் இருந்த பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர். உடனே சுதாரித்து கொண்ட பஸ் டிரைவர் சுபாஷ் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை முழு கொள்ளளவு உள்ள அட்டை குளத்திற்குள் பாய்வதற்குள் முன்எச்சரிக்கையாக நிறுத்திவிட்டார்.
இதனால் பஸ்சில் பயணித்த 36 ஐயப்ப பக்தர்களும் எவ்வித காயங்களும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.