தேர்தல் செலவு பணத்தை ஆட்டய போட்ட பாஜவினர்
தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.வினர் தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சி தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். அதேநேரத்தில், தேர்தல் செலவுக்காக அந்தந்த தொகுதி வாரியாக வேட்பாளர்களுக்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நேரடியாக வேட்பாளர்கள் மூலம் தொகுதி பொறுப்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால் பாஜ போட்டியிட்ட தொகுதிகளில் பாஜ நிர்வாகிகள் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள் என தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், 10 வது முறையாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இந்த நிலையில், நாகர்கோவிலில் தற்போது பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குமுறல் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது,
காலங்காலமாக தன்னலமற்று உழைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு நான்கு கட்டமாக கட்சி வழங்கிய பணத்தை இரண்டு கட்டமும் முழுமையாக கொடுக்காமலும், மேலும் பூத்துகள், மகளிருக்கு வழங்கிய பணத்தை முழுமையாக ஆட்டைய போட்டவர்களை பாரதிய ஜனதா என்ன செய்ய போகிறது என அச்சடிக்கப்பட்டுள்ளது. வேறு சில மாவட்டங்களில் உள்ளது போல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் பணம் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.