மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
சேலம் அருகே சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 65). இவர், நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘சேலம் அண்ணா பட்டு மாளிகை நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 1-ந் தேதி திடீரென பட்டு மாளிகை உதவி இயக்குனர், இனிமேல் பணிக்கு வர வேண்டாம் என கூறிவிட்டார். மேலும், உதவி இயக்குனரின் உதவியாளர் என்னை அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று தகாத வார்த்தையில் பேசி அனுப்பினார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வாழ்வாதாரம் இல்லாமல் நான் பரிதவித்து வருகிறேன். இதனால் வேறு வழியில்லாமல் தீக்குளிக்க முயற்சி செய்தேன் எனவே, மீண்டும் எனக்கு வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து மூதாட்டி ராணியை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆட்டோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story