தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கூட்டம்
கல்வி உதவித்தொகை வழங்கல்
சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டி.பி.டி ஆடிட்டோரியத்தில் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெற்றது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் தலைமை பொறியாளர் வெங்கடேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, இஸ்ரோ துணை திட்ட இயக்குனர் சரவணகுமார் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கல்லூரியின் முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலருமான கார்த்திகேயன் பேசுகையில், முன்னாள் மாணவர்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், கல்வி உதவித்தொகை வழங்குதல், கெஸ்ட் லெக்சார் மற்றும் திட்ட வழிகாட்டி ஆகிய பல்வேறு வகைகளில் கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர் என்றார். மேலும், டி.பி.டி ஆடிட்டோரியம் சிறப்பாக கட்டமைக்க தாராளமாக பங்களிப்புகளை வழங்கிய அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். விழாவில் 55 மாணவர்களுக்கு ரூ.1½ லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.