நாமக்கல்: வழிப்பறி திருடர்கள் விபத்தில் சிக்கி மரணம்!
கோப்பு படம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி காமராஜபுரத்தை சேர்ந்தவர் பொன்னார் (வயது31). அவர், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் செல்வதற்காக பொன்னார் தனது டூ வீலரில் நாமக்கல் -மோகனூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.
கணவாய்ப்பட்டியில், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகே, அவர் சென்றபோது, ரோட்டோரம் வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்தார்.அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர், பைக்கில் சென்ற பொன்னாரிடம் உதவி கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி பொன்னாரும் தனது டூ வீலரை நிறுத்தி தன்னிடம் இருந்த தண்ணீர் மற்றும் இரும்பு பொருட்களை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார். இந்த நிலையில், திடீரென எழுந்த வாலிபர்கள் இருவரும், பொன்னாரை தாக்கி, அவரிடம் இருந்து ரூ. 5,000 ரூபாய் ரொக்கம், மொபைல் போன் மற்றும் பைக் சாவியை பறித்துக் கொண்டு, தங்களது டூ வீலரில் நாமக்கல் நோக்கி தப்பிச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த பொன்னார் தனது பைக்கை தள்ளிக் கொண்டு நாமக்கல் நோக்கி சென்றார். இதற்கிடையில், வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற வாலிபர்கள் சென்ற பைக், சிறிது தூரத்தில் இருந்த தனியார் கல்லூரி அருகில் ரோட்டோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபரை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டு, தப்பி சென்றபோது ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலே உயிரிழந்தவர் சென்னையை சேர்ந்த மாரி (25) என்பதும், மற்றொருவர் நாமக்கல்லை சேர்ந்த லாரி பட்டறை கூலி தொழிலாளி நவீன் (30) என்பதும் தெரிய வந்ததுள்ளது.இறந்து போன இருவரும், ஏற்கனவே சென்னையில் ஒன்றாக வேலை செய்ததும் தெரியவந்தது. .