நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், எம்.எல்.ஏ. ராமலிங்கம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன்பின் பேசிய எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை முதல் வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை தொடங்கப்பட்டு நாளை மறுநாள் மாலை வரை நடைபெறும்.
1-ந்தேதி அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் தடையின்றி செல்ல மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழா நடைபெறும்.
1-ந்தேதி அன்று பக்தர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை ஒன்று கோவில் அருகில் அமைக்க வேண்டும். அரங்கநாதர் கோவில் முன்பு 108 ஆன்புலன்ஸ் சேவை முதலுதவி வசதிகளுடன் அதிகாலை 3 மணி முதல் வைத்திருக்க வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வேண்டும். கோவில் வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் இளையராஜா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா ஸ்ரீநிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.