திருச்சுழி : குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம். முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழியில் திருமேனிநாதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ரமணமகரிஷி பிறந்த இடம் என்பதால் திருச்சுழி சுற்றுலாதலமாகவும் உள்ளது.
திருச்சுழி ஸ்தலமானது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு அடுத்தபடியாக ஒரு புண்ணிய ஸ்தலமாக உள்ளது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10 வது ஸ்தலமாகவும் திருச்சுழி உள்ளது. தை அமாவாசையான இன்று காலை 6 மணி முதலே வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் குண்டாற்றில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். மேலும், திருமேனிநாதர் கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் மோட்சதீபம் ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.