திருக்குறள் சான்றிதழ் படிப்பு கருத்தரங்கம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருக்குறள் சான்றிதழ் படிப்பு கருத்தரங்கம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் வளர் மையமும், குறள் மலைச்சங்கமும் இணைந்து, திருக்குறள் தொடர்பான சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள், கருத்தரங்கம் நடத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

உலகத்தமிழர்களுக்காகவும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காகப் பல படிப்புகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் வளர் மையம் நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, திருக்குறளை மலையில் சிற்பமாகச் செதுக்கி வரும் அமைப்பான குறள் மலைச்சங்கம் அமைப்பு, தமிழ் வளர் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இளஞ்சிறார்களுக்குத் திருக்குறளில் பொதிந்துள்ள ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் பல்திறன் கூறுகள் ஆகியவற்றை மையமிட்ட சான்றிதழ் படிப்பும், இளைஞர்களுக்கு மேலாண்மைக் கூறுகளை மையமிட்ட பட்டயப்படிப்பினையும் நடத்துவதற்கான திட்டங்களுடன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும், திருக்குறள் காலங்களின் இலக்கியமாக விளங்குவதை , இன்றைய நவீனத் தலைமுறையிடம் கொண்டு சேர்த்திடும் வகையில் எதிர்வரும் மார்ச் 2024இல் ”எல்லாக் காலத்துக்கும் திருக்குறள்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் வளர் மையமும் குறள் மலைச்சங்கமும் திட்டமிட்டு வருகின்றன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், தமிழ் வளர் மைய இயக்குநர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதனமையர் முனைவர் இளையாப்பிள்ளை, குறள் மலைச்சங்க நிறுவனர் ப.ரவிக்குமார், முனைவர் மஞ்சுளா மற்றும் முனைவர் சங்கரராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story