திருக்குறள் மாணவர் மாநாடு 2024 இலட்சினை வெளியீடு
அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின் தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு இடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2023-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து எதிர்வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2024" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2023- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தேர்வு செய்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கப்படவுள்னர். இம்மாநாட்டில் வினாடி வினா, நாடகம், நடனம், பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, தனிநபர் போட்டிகள், கலைப்போட்டிகள், குறள் விளையாட்டு மற்றும் குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் “திருக்குறள் மாணவர் மாநாடு 2024" தொடர்பான இலட்சினை வெளியிட்டார். அதனை தொடரந்து, திருக்குறள் மாணவர் மாநாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 5 ஆசிரியர்கள் பங்கேற்கும் மிதிவண்டி பயணத்தை கன்னியாகுமரி மாவட்டம், தக்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவின் கௌதம், மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம்ஆகியோர் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தனர்.