செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் செல்லியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடப்பது வழக்கம். இதற்கு முன், 2011ம் ஆண்டு, இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் தீர்மானித்தனர்.
இதற்காக, சில மாதங்களாக இக்கோவிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீர் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தின் மீது, புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில், நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜா, தன் மகன் மற்றும் மகளுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். ரோஜாவின் கணவரான ஆர்.கே. செல்வமணியின் சொந்த ஊர் திருமுக்கூடல் என்பதாலும், செல்லியம்மன் தங்களது குடும்ப குல தெய்வம் என்பதாலும் அவரது முன்னிலையில், இந்த விழா நடைபெற்றது. திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.