திருமுருகன்பூண்டியில் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்த போராட்டம்!

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தரக்கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தர கோரியும், ஊதியத்தை முறையாக வழங்காததையும் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில், குப்பை அள்ளும் பணியானது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஊதியத்தை உயர்த்தி தராமலும், குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குமார், ஆணையாளர் ஆண்டவர் உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குப்பை அள்ளும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், தங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை குறைத்து வழங்குவதாகவும், அதையும் காலம் தாழ்த்தி வழங்குவதாகவும், இஎஸ்ஐ, பி.எப் தொகை முறையாக வழங்குவதில்லை என கூறி முறையிட்டனர். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களிடம் பேசிய தலைவர் மற்றும் ஆணையாளர் ஒப்பந்தத்தை மறு புதுப்பித்தல் செய்ததில், ஊதியம் வழங்க காலம் தாமதம் ஏற்பட்டதாகவும், ஊதிய உயர்வு, இஎஸ்ஐ, பி.எப் தொகை குறித்து சம்பந்தபட்ட தனியார் நிறுவனத்திடம் பேசி தீர்வு காணப்படும் என அவர்கள் உறுதியளித்ததின் பேரில் தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story