திருத்தணி அரசு மருத்துவமனை சாலை சேதம்
சேதமடைந்த சாலை
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு திருத்தணி மற்றும் சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினசரி 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளான மேட்டுத் தெரு மற்றும் ஆறுமுக சுவாமி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை, சிமென்ட் சாலைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளில், வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பள்ளம் தோண்டி குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும் 'மிக்ஜாம்' புயலால் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஆறுமுக சுவாமி கோவில் தெரு வழியாக அதிகளவில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வாகனங்கள் மூலமும், நடந்தும் வந்து செல்கின்றனர். ஆனால் சாலை ஆங்காங்கே பள்ளங்களாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.