திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத்திருவிழா
தெப்ப திருவிழா
சிவப்பெருமானின் நடனமாடிய ஐம்பெரும் சபைகளில் ரத்திசபையாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் உற்சவர் தீர்த்த குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இந்நிலையில் நேற்று மாலை தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலில் குவிந்தனர். மாலை 7 மணி அளவில் பார்வதி சமேத உற்சவர் சோஸ்கந்தர் சிறப்பு மலர் அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க தீர்த்த குளத்தில் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் மஹா தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து சுவாமி தெப்ப வைவம் நடைபெற்றது. அப்போது குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் குவிந்து நமச்சிவாய பக்தி முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் தெப்பத்திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருத்தணி டி.எஸ்.பி விக்ணேஷ் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.