முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட நிதியுதவி

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட நிதியுதவி
சிறுமி டானியாவுக்கு காசோலை வழங்கிய ஆட்சியர்
சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்கள் மகள் டானியாவுக்கு(9 ) அரிய வகை முகச்சிதைவு நோ`ய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க உதவிக்கரம் நீட்டுமாறு முதலமைச்சருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆக. 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து, தமிழக முதலமைச்சர், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, சிறுமி டானியாவுக்கு, 2-ம் கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களில் அவர் வீடு திரும்பினார்.

பின்னர் சிறுமி டானியாவின் வீட்டுக்குச் சென்று, நலம் விசாரித்த முதலமைச்சர், சிறுமிக்கு தேவையான உதவிகள் யாவும் செய்து தரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி டானியாவின் குடும்பத்துக்கு, திருவள்ளூர் அருகே பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொள்ள அனுமதி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி டானியாவுக்கு, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின்படி, அரசு மானியம் ரூ. 2.10 லட்சம் போக, வீடு கட்டிக் கொள்ள பயனாளியால் செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.2 லட்சத்தை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.

Tags

Next Story