பாவேந்தர் மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் விழா

பாவேந்தர் மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் விழா

திருவள்ளுவர் தினம் 

பொட்டலூரணியில் பாவேந்தர் தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவள்ளுவர் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே உள்ள பொட்டலூரணியில் பாவேந்தர் தமிழ் மன்றத்தின் சார்பில் 31 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவள்ளுவர் விழா நடைபெற்றது. விழாவின் முதல் அமர்வாக, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பெருஞ்சித்திரனார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, பாவேந்தர் பாடல் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என மாணவர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற்றன.

பெண்களுக்கான கோலப் போட்டியும் நடைபெற்றது. இரண்டாம் அமர்வாக அரங்க நிகழ்வு நடைபெற்றது. பாவேந்தர் தமிழ் மன்றத்தின் செயலாளர் ஈ.சங்கரநாராயணன் ஒருங்கிணைத்து நடத்திய இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பேரவைத் தலைவர் மணிமாறன், சித்திரமும் கைப்பழக்கம் அமைப்பின் பொறுப்பாளர் ஓவியர் கதிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற கலைப்போட்டியில் கலந்துகொண்டு கையெழுத்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பொட்டலூரணியைச் சார்ந்த, செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கோ,விசாலினி அவர்களுக்குப் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இராமச்சந்திரன் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கான திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பாவேந்தர் தமிழ் மன்றத்தைச் சார்ந்த, வெங்கடேசன், இராமகிருட்டிணன், அழகுராசன் ஆகியோர் பரிசு வழங்கினர். ஆசிரியர் இராசா நல்லாசிரியர் கோயில்பிச்சை ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாழர் சங்கத்தின் தென்காசி மாவட்டச் செயலாளர் மதியழகனின் சமூக விழிப்புணர்வு நாடகமும், கலைமாமணி இலா,சான்பாவா சிலம்பக் கலைக் குழுவினரின் சிலம்பக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரளான ஊர்ப் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், பொட்டலூரணி விவசாய சங்கத்தின் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags

Next Story