திருவட்டாறு : துணிக்கடை உரிமையாளர் விஷம் குடித்து பலி
திருவட்டாறு அருகே கடன் தொல்லையால் துணிக்கடை உரிமையாளர் விஷம் குடித்து பலி. போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள மேகமண்டபம் பகுதியை சேர்ந்தவர் கில்பார்ட் சேகர் (53). இவர் அந்தப் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இவர் பலரிடமிருந்து கடன் வாங்கி உள்ளார். இதனால் மனமுடைந்த கில்பர்ட் சேகர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கில்பர்ட்சேகர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஆன்சிலின் சுனி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கில்பர்ட் சேகர் தந்தை வில்லியம் போலீசில் அளித்துள்ள மற்றொரு புகாரில், - கடந்த 18ஆம் தேதி இதே பகுதியை சேர்ந்த 3 பேர் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கேட்டு மிரட்டியதாகவும், பணம் தராவிட்டால் செத்துப் போ என்றுமிரட்டியதோடு, குடும்பப் பெண்களை தகாத முறையில் பேசியதாகவும், இதனால் மன வருத்தத்தில் கில்பர்ட் சேகர் விஷம் குடித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இது கில்பர்ட் சேகர்இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன் அவர் தெரிவித்த தகவலை வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Next Story