கண்டுப்பட்டியில் திருவிளக்கு பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ குடியிருப்பு காளியம்மன் திருக்கோவிலில் 42 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா அம்மனுக்கு காப்பு கட்டுத்தளுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் ஒரு நிகழ்வாக 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து மங்களப் பொருட்கள் மற்றும் ஐந்து முகம் கொண்ட திருவிளக்கை வைத்து கணபதி பூஜை உடன் திருவிளக்கு பூஜையை துவங்கினர்.
தொடர்ந்து மங்கல இசையுடன் விநாயகர் பாடல்கள் பாடி, விளக்கு பூஜையை துவங்கி பின்னர் 1008 திருவிளக்கு போற்றி காயத்ரி மந்திரங்கள், மகாலட்சுமி மந்திரங்கள் மற்றும் அம்மனின் பக்தி பாடல்களை பாடி திருவிளக்கு பூஜையை செய்தனர். இதனைத் தொடர்ந்து திருவிளக்கிற்கு உதிரி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் திருமண தடை நீங்க வேண்டியும், குடும்ப நன்மைக்காகவும், புத்திர பாக்கியம் பெற வேண்டியும், காளியம்மனை நினைத்து வழிபாடு செய்தனர்.
இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.