காஞ்சி கோவில்களில் திருவிளக்கு பூஜை
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி வையாவூர் கற்பக விநாயகர் கோவிலில், மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி வையாவூர் சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், கோவிலை சுற்றியுள்ள பல்வேறு நகரங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
இதில், குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி, மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர். தொடர்ந்து சிறப்பு துாப தீப ஆராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்பேட்டையில், வடதிருக்கடவூர் என அழைக்கப்படும், அபிராமியம்மை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, செல்வம் பெருக, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 21வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், நாயக்கன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் பூஜையில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.