திருவோணம் புதிய வருவாய் வட்டம் துவக்கம்
விழாவில் கலந்து கொண்டவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் புதிய வருவாய் வட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேராவூரணி),
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, திருவோணம் ஒன்றிய குழுத் தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், வட்டாட்சியர்கள் முருகவேல் (திருவோணம்), சுந்தரசெல்வி (ஒரத்தநாடு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்” என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கப்பட்டுள்ளது.