17 ஆண்டுகளுக்கு பின் கல்யாண வரதராஜர் கோவிலில் தேர் திருவிழா
ஸ்ரீதேவி , பூதேவி சமேத பவள வண்ண பெருமாள்
திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோற்சவம், 2-0ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, கருடசேவை 22ம் தேதி நடந்தது. கருடசேவையின்போது, சப்பரத்தின் தண்டு உடைந்து சுவாமி கீழே சரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வைகாசி பிரம்மோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடக்கிறது. கோவிலுக்கு தனித்தேர் இல்லாததால், மண்ணடி, பக்தவச்சலம் பெருமாள் கோவில் தேர், வாடகைக்கு எடுத்து வரப்பட்டு, திருத்தேர் உற்சவம் நடக்க இருக்கிறது. அதன்படி, 25 அடி உயர அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், ஸ்ரீதேவி - பூதேவி சமேத உற்சவர் பவள வண்ண பெருமாள், 17 ஆண்டுகளுக்கு பின், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், மாடவீதி உலா நடக்கும். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.