உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அமல்: ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில்  "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும். இன்று தொடங்கும் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்க உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி கலெக்டர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பர். அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் வட்டம் சுகந்தலை கிராமம் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் கடம்பாகுளம் மறுகாலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சீரமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகள் மற்றும் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story