பைக் விபத்தில் தலைமைக் காவலர் பலி
மோகன்
தூத்துக்குடியில் சாலை குழியால் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கிழே விழுந்து காயமடைந்த தலைமைக் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நயினார் மகன் மோகன் (45), இவர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 4வது கேட் சில்வர்புரம் பகுதியில் சாலையில் குழி தோண்டியிருந்ததால் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மோகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த தலைமைக் காவலர் மோகனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். விபத்தில் காவலர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story