வங்கி ஊழியரிடம் நகை பறிப்பு : அண்ணன் தம்பி உட்பட 3பேர் கைது
பைல் படம்
நாசரேத்தில் வங்கி ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் செயின், செல்போனை பறித்த அண்ணன், தம்பி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் மனோவா (28). இவர் தனியார் வங்கியில் சுய உதவிக்குழு கடனை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று நெய்விளை அருகே பைக்கில் சென்றபோது 3பேர் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் மனோவா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் நெய்விளை பகுதியைச் சேர்ந்த மாயண்டி மகன் பால சதீஷ்குமார் (23), கந்தன் மகன்கள் மாடசாமி (40), மாயாண்டி (28) ஆகிய 3பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3பேரையும் கைது செய்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story