வெட்டப்பட்ட மரங்கள் - எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

தூத்துக்குடியில் சாலையோரத்தில் இருந்த மரங்களை தனியார் வணிக வளாகத்தினர் வெட்டியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தூத்துக்குடி தமிழ் சாலையில் வாட்டர் டேங்க் எதிரில் உள்ள மணி நகர் 2வது தெருவில் தனியார் வணிக வளாகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மரங்களின் கிளைகளை ஒட்டுமொத்தமாக வெட்டினர். அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் மரம் வெட்டும் தொழிலாளர்கள் மூலம் வெட்டப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர்.

இது தொடர்பாக மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் நிழல் தரும் மரங்களை எவ்வித அனுமதியும் இன்றி வெட்டுகிறார்கள். இதனை மாநகராட்சி மற்றும சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக வணிக வளாக நிர்வாகத்தினர் கூறும் போது, "எங்களது வணிக வளாகத்திற்கு வரும் மின் வயர்கள், சிசிடிவி வயர்கள் அடிக்கடி சேதம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக மரங்களின் கிளைகளை வெட்டியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story