வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
கூடுவாஞ்சேரி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 37. இவர், நேற்று காலை ஜி.எஸ்.டி., சாலை, வல்லாஞ்சேரி அருகில் உள்ள தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கும்பல், அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 1,000 ரூபாய் பறித்து சென்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நந்திவரம்- காலனி புதுபாளையத்தம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 26, என்பவரிடம், ஜெய் பீம் நகரில் ஒரு கும்பல் நேற்று, பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர் இல்லை எனக் கூறியதையடுத்து, அவரை கத்தி, கல், ஓட்டுத்துண்டு உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வரவும், ஐந்து பேரும் தப்பினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், வழிப்பறி அராஜகத்தில் ஈடுபட்டது, நந்திவரம்- - கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சதீஷ், 36, வினோத், 28, லச்சா என்ற லட்சுமணன், 34, பிரகாஷ், 33, வினோத், 28, ஆகிய ஐந்து பேர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் மலைமேடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்து, அவர்கள் தப்பியோட முயன்றதில், எதிரே வந்த வாகனங்களில் அடிபட்டதில், மூவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்களில் மூவர் தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.