குழாய் உடைப்பால் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்

காங்கேயம் சென்னிமலை சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது .பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்குட்பட்ட பல இடங்களில் நிலத்தடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் வழிந்தோடுகிறது. அந்த வகையில் காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் முன்புறம் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது.

இதனால் அந்த குழாய்களின் வழியே செல்லும் பெரும்பாலான தெருக்களுக்கும், குடியிருப்புகளுக்கும்முறையாக குடிநீர் செல்லாமல் சாலைகளில், கழிவுநீர் கால்வாய்களிலும் வெள்ளம் போல் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் பல தெருக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இவ்விடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்று அசுத்தமாக உள்ளது.

பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், சாக்கு பைகள், அன்றாட வீட்டு உபயோக குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரையும் மாசுபடுத்தி வருகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story