தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் - ஊராட்சி ஊழியரால் பரபரப்பு.

தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் -  ஊராட்சி ஊழியரால் பரபரப்பு.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏசுரெத்தினம்

மத்திய கோடு ஊராட்சியில் ஊராட்சி ஊழியர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அருமனை பகுதியை சேர்ந்தவர் ஏசுரெத்தினம்.இவர் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மத்திகோடு ஊராட்சியில் குடிநீர் நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த ஊராட்சி தலைவியாக அதிமுகவை சேர்ந்த அல்போன்சாள் உள்ளார். கடந்த சில நாட்களாக ஏசுரெத்தினத்தை ஊராட்சி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட தலைவி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதுபோல் அவருக்கு கடந்த மாத சம்பளம் போடாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஏசுரெத்தினம் பெட்ரோல் கேனுடன் மத்திகோடு ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார். சம்பளம் வழங்காவிட்டால் இங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறி போராட்டம் நடத்தினார்.அப்போது ஊராட்சி பணியாளர் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக அலுவலகத்தில் இருந்து வேளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடம் வந்து ஏசு ரெத்தினத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய கருங்கல் போலீசார், லாவகமாக அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.இதையடுத்து அலுவலகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து ஏசுரெத்தினம் போராட்டம் நடத்தினார். இதற்கிடையே கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஏசுரெத்தனத்திற்கு சம்பளம் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை அவர் கைவிட்டார்.

Tags

Next Story