நண்பர்களை கடத்தி செயின் பறித்த மூவர் கைது
நண்பர்களை கடத்தி செயின் பறித்த மூவர் கைது
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் நண்பர்களை கடத்தி சென்று செயின் பறித்த மூவர் கைது.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 42. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பவுடர் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் நண்பர் வல்லம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர்களிடம், வாலாஜாபாதை சேர்ந்த ராஜேஷ் என்பவர், தன் சுசூகி காரை அடகு வைத்து பணம் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார். அதன்படி, திம்மாவரம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரிடம் அடகு வைப்பதாக கூறி, கடந்த டிசம்பர் 18ம் தேதி, 2. 5 லட்சம் ரூபாய்க்கு காரை விற்று விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், ராஜேஷ் தன் காரை திரும்ப கேட்டபோது, சண்முகமும், வெங்கடேசனும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அதனால் கோபமடைந்த ராஜேஷ், தன் நண்பர்களான செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சூர்யா, பிரபாநந்தன் உள்ளிட்டோருடன், கடந்த 19ம் தேதி, சண்முகம் மற்றும் வெங்கடேசனை காரில் கடத்தி சென்று மிரட்டி, 5 சவரன் தங்க செயின் மற்றும் சண்முகத்தின் டாடா காரை பறித்துக்கொண்டனர். இது குறித்து, சண்முகம் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ், 39, சுந்தர், 37, பிரபாநந்தன், 35, உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷின் நண்பர்கள் சிலரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story