பரமத்தி வேலூர் அருகே அனுமதி இன்றி காவிரி ஆற்றில் மணல் கடத்திய மூன்று பேர் கைது

பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய மூன்று பேர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவைவும் பறிமுதல் செய்து பரமத்திவேலூர் போலீசார் நடவடிக்கை.
பரமத்தி வேலூர் காவிரிக்கரை பகுதியில் சட்ட விரோதமாக ஆற்று மணல் கடத்துவதாக பரமத்தி வேலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வேலூர் காவல் உதவி ஆய்வாளர் குமார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக வருவதை கண்ட காவல் உதவி ஆய்வாளர் ஆட்டோவை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் ஆட்டோவை நிறுத்தாமல் அவர் மீது மோதுவது போல் வந்து வேகமாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து நிற்காமல் வேகமாகச் சென்றது. காவல் உதவி ஆய்வாளர் குமார் இந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்து ஆட்டோவை சோதனையிட்டதில், ஆட்டோவில் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியிலிருந்து அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஆட்டோவில் மணல் ஏற்றி கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து ஆட்டோவில் இருந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்த அறிவழகன் மகன் மணிகண்டன் (28), பரமத்திவேலூர் கிழக்குத் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜலிங்கம் (28) அதே பகுதியைச் சேர்ந்த மதி மகன் விஜயராஜ் (36) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்ததுடன் வழக்கு பதிவு செய்து மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story