திருத்தணி அருகே கத்தியை காட்டி செல்போன் பறித்த மூவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள சின்ன மண்டலி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (27) இவர் சொந்தமாக அறுவடை இயந்திரம் வைத்து விவசாய பணிகளை செய்து வருகிறார். இந்தநிலையில் இரவு இவர் சின்ன மண்டலி களாம்பாக்கம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் இவர் எதிரே வந்து திடீரென பைக்கை நிறுத்தி அவர்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அவர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் திருவலாங்காடு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் குமார், தனி பிரிவு காவலர் வருண் குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு ஐந்து மணி நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கடம்பத்தூர், சக்கரை மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் (18), சத்திரை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன் (19), நகரி குப்பம் நந்தகுமார் (18) என தெரியவந்தது. இதனையேடுத்து மூவரையும் கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.