சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் ஊழியர்களுக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது!!

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் ஊழியர்களுக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது!!

கத்தி குத்து 

காஞ்சிபுரம் அருகே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து, கடை ஊழியர்களை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் வினோத் என்பவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரபல ரவுடியான பூக்கடை சத்திரம் செல்வம் என்பவரின் மகன் உதயா (19), சிறுகாவேரிப்பாக்கம் சுரேஷ் என்பவரின் மகன் அண்ணாமலை (18), கோனேரிக்குப்பம் சுதாகர் என்பவரின் மகன் சுரேஷ் (29) ஆகியோர் உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றதால் கடை ஊழியரான மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மைபுஜால் மற்றும் தனுஷ் ஆகியோர் காசு கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது போதையில் இருந்த ரவுடிகள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊழியர்கள் இருவரையும் ரவுடிகள் கத்தியால் குத்தினர். இதனால் மைபுஜாலுக்கு முதுகு, தலை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனுஷுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மைபுஜாலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி உதயா மற்றும் அவரது நண்பர்களான அண்ணாமலை, தனுஷ் ஆகியோரை கைது செய்தனர். இதில் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் கை, கால்களில் எலும்பு முறிந்ததால் அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உதயா மீது கொலை, அடிதடி, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மே மாதம் பூக்கடை சத்திரம் பகுதியில் கஞ்சா போதையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை உதயா மிரட்டினார். அதை சிலர் தட்டிக் கேட்டபோது, தன்னைத் தானே பிளேடால் கிழித்துக்கொண்டு பொது மக்களுக்கு பீதி ஏற்படுத்தினார். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைதான அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். கடந்த வாரம்தான் சிறையில் இருந்து உதயா வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story