சங்கிரியில் முதியோர்களுக்கு வாக்களிக்க உதவிய மூன்று சக்கர நாற்காலிகள்

மூன்று சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முதியவர்கள்
சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர நாற்காலிகளில் அமர்ந்து சென்று அவர்களது வாக்குகளை செலுத்தினர். நாமக்கல் மக்களவை தொகுதிக்குள்பட்ட சங்ககிரி வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளர்கள் ஏராளமானோர் வாக்களித்தனர்.
அதில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்க அவர்களது குடும்பத்தினர் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தனர். வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களுக்கு வாக்குச்சாவடியில் மூன்று சக்கர நாற்காலிகள் வசதிகள் உள்ளது என தெரிவித்தனர்.
அதனையடுத்து அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்கள், பேரூராட்சி தூய்மைபணியாளர்களை அழைத்து அவர்களை வாக்களித்து விட்டு மீண்டும் பாதுகாப்பாக வெளியே வருவதற்கு உதவினர். போலீசாரின் சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.
