நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி - ரவுடி மீது குண்டர் சட்டம்
நாராயணசாமி
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பு என்கிற பரணிதரன் (வயது 22). இவரும்,அவரது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் பிரசாந்த் (28) என்பவரும் சம்பவத்தன்று அங்குள்ள ரெயில் நிலைய நடைமேடையில் படுத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த முத்தழகன் மகன் நாராயணசாமி (32) என்பவர், பரணிதரனை கொலை செய்யும் நோக்கத்துடன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் பரணிதரன் பலத்த காயத்துடனும், பிரசாந்த் லேசான காயத்துடனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியான நாராயணசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் மாதேஷ், முருகையன், கார்த்தி, தமிழரசன், வசந்தகுமார் ஆகி யோரை கைது செய்து சிறையில் அடைத்தனர், இந்நிலையில் நாராயணசாமி மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ள நிலையில் தொடர்ந்து அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார், இதையடுத்து நாராயணசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்பேரில் நாராயணசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தாலுகா போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவுநகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.