புலி வீடியோ போலியானது - வனத்துறை விளக்கம்
போலி வீடியோ
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூடலூர் சுற்றுப்பகுதிகளில் சமீப காலங்களாக சிறுத்தை, புலிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதனிடையே பொதுமக்கள் தங்கள் கிராம பகுதிகளில் புலி அல்லது சிறுத்தை நடமாட்டத்தை பார்த்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பந்தலூர் அருகே மேங்கோ ரேன்ஜ் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் கூறிய நிலையில் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது அத்திக்குன்னா பகுதியில் ஒரு வீட்டின் முன்பு புலி நிற்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து அந்த வீடியோவை ஆராய்ந்த வனத்துறையினர் அது பொய்யான வீடியோ என்றும் இணையத்தளம் மூலம் சித்தரிக்கப்பட்டவை எனவும் பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் இது போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி வருகின்றன. மக்கள் அச்சப்பட தேவையில்லை என வனத்துறை தெரிவித்துள்ளனர்.