மரக்காணத்தில் ரூ.10.80 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா

வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யன்சு நிகாம் முன்னிலை வகித்தார், தாசில்தார் பாலமுருகன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தாக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் கலந்துகொண்டு 778 பயனாளிகளுக்கு ரூ.10.80 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “ தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பயன்பெற்றிடும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் நிரந்தர குடியிருப்பு பெற்றிடும் வகையில், இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள், அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றிடும் வகையில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர் நிகழ்வாக, இன்றைய தினம், மரக்காணம் வட்டத்தில், 500 பயனாளிகளுக்கு ரூ.9,60,80,795/- மதிப்பீட்டிலும், திண்டிவனம் வட்டத்தில் 200 பயனாளிகளுக்கு ரூ.96,40,000/- மதிப்பீட்டிலும், மேல்மலையனூர் வட்டத்தில், 78 பயனாளிகளுக்கு ரூ.23,40,000/- மதிப்பீட்டில் என மொத்தம் 778 பயனாளிகளுக்கு ரூ.10,80,60,795/- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைத்துiயின் மூலம், தலா ரூ.6,690/- வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.66,900/- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரமும், தலா ரூ.7,280/- வீதம் 17 பயனாளிகளுக்கு ரூ.1,23,760/- மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, அரசுத்துறைகள் சார்பாக, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவ முகாம்கள், இலவச பட்டா வழங்குதல், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன என கூறிய அவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான இலவச வீட்டுமனைப்பட்டாவினை புதுக்கோட்டை மற்றும் ஊட்டி மாவட்டங்களில் வழங்கினார்கள்.

இப்பட்டாவினை கொண்டு வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்வதற்கான வங்கியில் வைத்து கடன்பெற்றார்கள். தற்பொழுது இக்கடன் தொகையினை செலுத்தமுடியாததால் கடன் தொகையினை அரசே செலுத்தி அவர்களுக்கான வீட்டுமனைப்பட்டாவினை அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் புஷ்பவள்ளி குப்புராஜ்,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் துர்காதேவி கலைஞர், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் சேரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story