திருமருகல் : கத்தரிக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
கத்தரிக்காய் பறிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி
நாகை மாவட்டத்தில் திருமருகல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆலத்தூர்,அகரக்கொந்தகை, கொத்தமங்கலம்,சியாத்தமங்கை, தென்பிடாகை,கீழப்பூதனூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடி மேற்கொள்கின்றனர். குறிப்பாக, கத்திரிக்காய்,வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், மிளகாய் உள்ளிட்டவற்றை நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிடுகின்றனர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தோட்டப்பயிர் சாகுபடியாளர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் பெரும்பான்மையான விவசாயிகள் கத்தரி மற்றும் வெண்டை பயிரிட்டுள்ளனர்.இது தினமும் அதிகமான காய்களை பறிக்கும் வகையில் மகசூல் அதிகரித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலத்தூர் பகுதியில் கத்தரி மற்றும் மிளகாய் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் கூறுகையில், 3 மாதத்தில் 4 அடிக்கு மேல் செடி வளர்ந்துவிட்டது. இப்போது தினமும் காய்களை பறிக்கும் விதத்தில், அதிக மகசூல் கிடைத்துள்ளது. கிலோ ரூ.30 முதல் 40 வரை வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். திருமருகல் பகுதி மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.வெயில் கடுமையாக இருப்பதால் செடிகளை பாதுகாப்பதில் சிரமம் இருக்கிறது.ரசாயான உரம் அதிக பயன்பாடின்றி, இயற்கை உரம் பயன்படுத்துவதால், இப்பகுதி காய்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்றனர்.