திருப்பூர்: கலெக்டர் ஆலோசனை கூட்டம்!
ஆட்சியர் ஆலோசனை
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வில் அருணாச்சலம், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன், பகுஜன் சமாஜ் கட்சியில் பழனி, பாஜகவில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சியில் சீதாலட்சுமி, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் ஜனார்த்தனம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன், கார்த்திகேயன், சதீஷ்குமார், சுப்பிரமணி, செங்குட்டுவன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
நோட்டா உட்பட மொத்தம் 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்தன. வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான, திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஆயத்த பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பல்வேறு தகவல்களை வழங்கினார். இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய் பீம், சப் கலெக்டர் சௌமியா ஆனந்த் மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.