தீவனப் பயிர் சாகுபடிக்கு மானியம்
திருப்பூர் ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியை பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவுக்கு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் முக்கியமானது.
கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவீனத்தில் 65 முதல் 75 சதவீதம் தீவனத்திற்காகவே செலவாகிறது. அரசு மானியத்துடன் கூடிய பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க பழத் தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் விவசாயியிடம் கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பழத்தோட்டம் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் 1/2 ஏக்கரில் இறவை சாகுபடியில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து 3 வருடங்கள் பராமரித்திட விருப்பமுள்ளவராக இருத்தல் வேண்டும். ஒரு பயனாளிக்கு குறைந்தபட்சம் 1/2 ஏக்கர், அதிகபட்சம் 1 ஹெக்டேர் (2, 471 ஏக்கருக்கு) வழங்கப்படும் மானியத்தில் தானிய பயிர்கள், புல் வகைகள், மேய்ச்சல் நில புல் வகைகள் ஆகியவற்றை பயிரிட விருப்பமுள்ளவராக இருத்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.