முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

எம்எல்ஏ செல்வராஜ் 

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ. 103 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றி கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.103 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ-. நன்றி தெரிவித்துள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூரை மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் கலைஞர் தரம் உயர்த்தினார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து திருப்பூருக்கென 4-ம் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், 843 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய தார் சாலைகள், முத்தமிழறிஞர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

27 அரசு பள்ளிகளில் 60 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே சொர்ணபுரி லே-அவுட் பகுதியிலும், நொய்யல் ஆற்றின் குறுக்கே, ஈஸ்வரன் கோவில் அருகிலும், நடராஜா தியேட்டர் அருகிலும், ஜம்மனை ஓடையின் குறுக்கே தந்தை பெரியார் நகரிலும் நான்கு புதிய உயர்மட்ட பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ.1274 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 273 நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.75 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அமைக்கபடுமெனவும், ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் பெருமாநல்லூர் சாலையில் நல்லாற்றில் புதிய பாலங்கள் கட்டப்படுமெனவும், ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் கிராமப் பகுதிகளில் 8 புதிய அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் கட்டப்படுமெனவும், ரூ.11.17 கோடி மதிப்பீட்டில் 13 புதிய சமுதாய நலக் கூடம், ரூ.4 கோடி மதிப்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை என மொத்தம் 103 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்காக திருப்பூர் மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story