வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய நீதிமன்றம் திறப்பு
வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை விரைந்து விசாரிக்க திருப்பூரில் மேலும் ஒரு புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பகுதியில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது. இதுபோன்ற வழக்குகள் கூடுதல் மாவட்ட நீதிமன்ற அளவில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதுபோன்ற வழக்குகள் 8 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டில், இதற்கென சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான நீதிபதி நியமிக்கப்பட்டார். அதன்பின், இது போன்ற வழக்குகளில் விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டது.
மேலும், மோட்டர் வாகன விபத்துகளில் பாதிக்கப்படுவோர் இழப்பீடு கேட்டு தொடரும் வழக்குகள்; இழப்பீடு உத்தரவுகள் நிறைவேற்ற கோரும் வழக்குகள் அதிகளவில் விசாரித்து தீர்வு காணப்பட்டது. தற்போது இந்த நீதிமன்றத்திலும் 5 ஆயிரத்துக்கும் மேல் வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக, கூடுதலாக மற்றொரு நீதிமன்றம் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான இந்த நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருப்பூர் மாவட்ட நீதித்துறை பொறுப்பு நீதிபதி. மாலா இதை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி. சொர்ணம் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர்.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். கயல்விழி செல்வராஜ்,திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.பிரவீன் குமார் அபினபு, மாவட்ட ஆட்சித் தலைவர். கிறிஸ்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.