திருப்பூர் : திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை வருகை

திருப்பூர் : திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு  நாளை வருகை

மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன்

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை திருப்பூர் வர உள்ள நிலையில், கருத்துக்கள் தெரிவிக்க பல்வேறு துறையினருக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு அரசு கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., கழக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., அயலக அணி மாநில செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உள்ளனர்.

இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குள்ளடங்கிய காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு கோரிக்கை மனுக்களை பெற நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் திருப்பூர், பப்பீஸ் ஹோட்டலுக்கு வருகை தர இருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் மேற்கண்ட தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வருகை தரும் அனைவரும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையிலான தங்கள் கருத்துக்களை மனுவாக எழுதிக் கொண்டு வரவும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story