ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்கு திருப்பூர் முன்னோடி

ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்கு திருப்பூர் முன்னோடி

 திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா

தையல் உள்ளிட்டவைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா திருப்பூர் அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்கு நிறுவன தலைவரும், ஆயத்த ஆடை வீட்டு உபயோக ஜவுளி பொருள் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவருமான சக்திவேல் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னோசன்ட் திவ்யா பேசியதாவது:- தமிழக அரசு தொழில்களை ஊக்குவிக்கவும், திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 1000 பேருக்கு தையல் மற்றும் மெர்ச்சண்டைசிங் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 80 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்களுக்கு தையல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இருக்கின்ற துறைகளில் ஜவுளித்துறையினர் மட்டுமே தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு சேர்த்து வருகிறார்கள். இதன் மூலம் நிறுவனங்கள் உற்பத்தியும் அதிகரிக்கும். பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் ஆடை தயாரிப்பில் ஈடுபடுவதால் ஆடை தயாரிப்பு கழிவுகள் இன்றி திருப்தியாக நடைபெறும். திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்கு முன்னோடியாக திருப்பூர் பின்னலாடை துறை உள்ளது. திருப்பூர் பகுதிகளில் நிறுவனங்களுக்கு வந்து வேலை கற்றுக் கொண்டு வேலை செய்து வருகிறவர்கள் பலர் உள்ளனர். மற்ற துறைகளிலும் பயிற்சி அளித்து தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தொழில்கள் அனைத்தும் நன்றாக வளரும். இந்த தொழில்களுடன் நாடும் வளரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story