அதிமுகவிடம் இருந்து நழுவிய திருப்பூர் வடக்கு தொகுதி வாக்கு வங்கி!

அதிமுகவிடம் இருந்து நழுவிய திருப்பூர் வடக்கு தொகுதி வாக்கு வங்கியால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை அதிமுகவிடம் இருந்து நழுவிய திருப்பூர் வடக்கு வாக்கு வங்கி திருப்பூர் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், பாஜக முகவர்கள் 4 பேர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களை முன்புறம் அனுமதிக்காமல் நின்றதால், அவர்களிடம் அதிமுகவினர் தங்களை முன் வரிசையில் நிற்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து, தபால் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் களம் கண்டார். இவர் முதல் சுற்றிலே 3,957 வாக்குகள் முன்னிலை பெறத் துவங்கினர்.

இதற்கு அடுத்த நிலையில் அதிமுக அருணாச்சலம், பாஜகவின் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் இடம்பிடித்தனர். தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலிடத்தில் நீடிக்கவே, வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், அதிமுக வேட்பாளர் அருணாச்சலம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் 6 மற்றும் 7-ம் சுற்றுகளுக்கு பிறகு மையத்தில் இருந்து வெளியேறினர். அதேசமயம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்.பி.யும் வேட்பாளருமான கே.சுப்பராயன் நேற்று மாலை வரை வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவில்லை. கடந்த முறை வெற்றி பெற்றபோதும், இதேபோன்று தான் எம்.பி. வாக்கு எண்ணும் மையத்துக்கு வராமல் இருந்தார். ஆனால் சுற்றுவாரியாக நடக்கும் விவரங்களை கட்சியினரிடம் தொடர்ந்து அலைபேசியில் கேட்டு தெரிந்து கொண்டார்.

வாக்கு எண்ணும் மையத்தில் அந்தியூர் தொகுதி, திருப்பூர் தெற்கு தொகுதிகள் அடுத்தடுத்து மதியம் 2 மணி அளவில் எண்ணி முடிக்கப்பட்டன. தெற்கு தொகுதியில் 75,278 வாக்குகளும், அருணாச்சலம் 34,800, முருகானந்தம் 34,702 ஆகிய வாக்குகளை பெற்றனர். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வெறும் 98 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். 10-வது சுற்றில் எம்.பி.சுப்பராயன், 57 ஆயிரத்து 306 வாக்குகள் பெற்று, முன்னிலை பெற்றார். வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தா.கிறிஸ்துராஜ், தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர் தொடர்ந்து பார்வையிட்டனர்.

அதிமுகவிடம் இருந்து நழுவிய திருப்பூர் வடக்கு திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவின் பெரும் பலமாக இருந்த பகுதி. கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகவினர் வசமே இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 3 முறை எம்.எல்.ஏ.க்களை அதிமுகவுக்கு தந்த தொகுதி இது. ஆனால் இந்த தொகுதியில் அதிமுகவை காட்டிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலாக வாக்குகளை பெற அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற நினைத்திருந்தோம்.

ஆனால் எதிர்பார்த்தபடி வாக்குகள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு சுற்றிலும் அதிமுகவை காட்டிலும், திமுக வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 1000-ம் வாக்குகளுக்கு மேல் தொடர்ச்சியாக முன்னிலை பெற அதிர்ச்சி ஏற்பட்டது. பவானி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் அதிமுக முதல் சுற்றில் 352 வாக்குகள் முன்னிலை பெற்றது. மற்ற சுற்றுகளில் எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெற்றுள்ளது” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story