திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா!

பெருமாநல்லூர் கொண்டத்துகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் காப்புக்கட்டு பூசாரிகள் குண்டம் இறங்கியதைத் தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவையொட்டி, பெருமாநல்லுரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு வந்தனர். அதிகாலையில் 4 மணிக்கு கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீளம் கொண்ட குண்டத்தில் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் கைக்குழந்தைகளுடன் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது.

Tags

Next Story