திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை

இல.பத்மநாபன் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கட்சியினர் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழகத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அரசியல் ஆர்வத்தால் தனது 14-வயதில் அரசியல் களம் புகுந்து பள்ளி மற்றும் மேடை கலைநிகழ்ச்சிகள் மூலம் திராவிட கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பினார். 1968-ம் ஆண்டு முதல்முறையாக திமுக பொதுக்கூட்டத்தில் பேசும் வாய்ப்பை பெற்றும், வட்டக் கழக பிரதிநிதியாக உயர்ந்து, 1973-ம் ஆண்டு தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனார்.

1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைக்கு உள்ளானார். 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணியை துவங்கினார். 1984-ம் ஆண்டு இளைஞர் அணியின் செயலாளராக வழிநடத்தினார். இளைஞர்களுக்கு எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி, உழைப்புக்கு இலக்கணமாக விளங்கினார். 1989-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வாகவும், 1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராகவும் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணி ஆற்றினார். தொடர்ந்து ஓய்வின்றி உழைத்து, 2008-ம் ஆண்டு திமுக பொருளாளராகவும், 2009-ம் ஆண்டு துணை முதல்வர் உயரத்தையும் மு.க.ஸ்டாலின் எட்டினார். 2017-ம் ஆண்டு திமுக செயல் தலைவராகவும், 2018-ம் ஆண்டு திமுக தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று, இன்றைக்கு தமிழ்நாட்டு முதல்வராக அமர்ந்திருக்கும் மு.க.ஸ்டாலினின் நாளை கொண்டாடப்படும் (மார்ச் 1) 71-வது பிறந்த நாள் விழாவை, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழகத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகளும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும், கட்சியினரும் இணைந்து மார்ச் மாதம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், ரத்த தானம், கண் தானம், முதியோர், ஆதரவற்றோர் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுகள் வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும் மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும்.

இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story