திருவள்ளூரில் அடங்காத கொடிக்கம்பம், பேனர் கலாசாரம்

திருவள்ளூரில் அடங்காத கொடிக்கம்பம், பேனர் கலாசாரம்

 பேனர் கலாசாரம்

திருவள்ளூரில் பேனர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசியல், திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி, அரசியல் கட்சி பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி அருகே தி.மு.க., சார்பில் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்ற தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. இதற்காக சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மணவாள நகர் ரயில்வே மேம்பாலத்திலிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி வரை நெடுஞ்சாலை மீடியனில் தி.மு.க., கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கொடிக்கம்பங்கள் சில இடங்களில் கீழே விழுந்து கிடந்தன. அவ்வாறு கொடிக்கம்பங்கள் கீழே விழும்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பகுதிவாசிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர். இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் திருவள்ளூர் பகுதியில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மணவாள நகர் ரயில்வே மேம்பாலம் முதல் பட்டரைபெரும்புதுார் டோல்கேட் வரை, இரு வழித்தடங்களிலும் ஐந்து கிலோ மீட்டர் துாரத்திற்கு சென்ட்ரல் மீடியனில் அ.ம.மு.க., கட்சியினரின் பேனருடன் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட நிர்வாகம் வரும் காலங்களில் நெடுஞ்சாலை பகுதிகளில் கொடிக்கம்பங்கள் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story