தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது - பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா பிரச்சாரம்
தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது என தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது என்றார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தேமுதிக வேட்பாளர் பெ. சிவநேசனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்த அவர் பேசியது:

திமுக ஆட்சிக் காலத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படவில்லை. நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் உயிர்ப்பிக்கப்படும். ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடு மீண்டும் நடத்தப்படும்.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர் வாரப்படும். தஞ்சாவூர் முழுவதும் லாட்டரி விற்கப்படுவதால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளும், கஞ்சா விற்பனையும் நடைபெறுவதால் தமிழ்நாடே போதை மாநிலமாக மாறிவிட்டது. பேருந்து கட்டணம், பால், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை போன்றவை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இத்தேர்தலைப் பயன்படுத்தி தேமுதிகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

Tags

Next Story