ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்பு - ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை

பள்ளிபாளையம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 3.91 ஏக்கர் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் அக்ரஹாரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, அறநிலையத்துறை நிலம் சுமார் 3.91 ஏக்கர் நிலம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் பகுதியில் உள்ளது.

இந்நிலையில் இந்த கோவில் நிலத்தை ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்த சிலர் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டியுள்ளதாக தெரிகிறது.

எனவே இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி நிலத்தை மீட்க வேண்டுமென புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த வழக்கில் ,கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி நிலத்தை அறநிலையத்துறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என திருச்செங்கோடு சப் கோர்ட் உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பு நிலத்திற்கு சென்ற இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கோர்ட் அமினா செல்வராஜ் ஆகியோர் கோவில் நிலத்தை ஆய்வு செய்தனர்.

நிலத்தின் முன் பகுதி மட்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கோவிலாக மாற்றப்பட்டு பின்பகுதி உள்ள நிலம் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காலி இடமாக இருப்பது தெரிய வந்தது..இதனையடுத்து கோர்ட் அமினா ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை இந்து அறநிலைத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்... இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளதால், இது குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story