அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த திவ்ய தேச கோவில்

காஞ்சிபுரம் பவளவண்ணர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலரிடம் இருந்து மீட்கப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதில் பச்சைவண்ணர் என அழைக்கப்படும் அருள்மிகு பிரவளவர்ணர் மற்றும் அருள்மிகு பவளவண்ணர் திருக்கோயில் ஆகும்.

இத்திருகோயிலின் பரம்பரை அறங்காவலராக ஆதிலட்சுமி என்பவர் இருந்து வந்தார். இவர் திருக்கோயில் நிர்வாக குறைபாடுகள் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவுப்படி நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இன்று காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தக்காராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பினை திருக்கோயில் வளாகத்தில் ஓட்டப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் , செயல் அலுவலர்கள் திருக்கோயில் ஆய்வர்கள் உள்ளிட்டோர் திருக்கோயிலில் உள்ள பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி அதனை ஆவணப்படுத்திய பின், இன்று சமய அறநிலையத்துறை திருக்கோயில் முறைப்படி உண்டியல் அமைத்து திருக்கோயில் நிர்வாகத்தை ஏற்றது.

கடந்த பல வருடங்களாக இத்திருக் கோயில் பரம்பரை அறங்காவலராக கண்காணித்து வந்த நிலையில் திருக்கோயில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாததும் , மகா கும்பாபிஷேகம் நடத்தப்படாத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பேற்றதும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story