வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரனுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டு
பாராட்டு சான்றிதழ்
டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரனுக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. தேசிய அளவில் கல்வி நிர்வாகத்தில் புதுமைகள், புதிய அணுகுமுறைகள் ஆகியவற்றிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்தது.
2 நாள் நடைபெற்ற மாநாட்டில் தேசிய அளவில் 64 கல்வி அலுவலர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அரசு பரிந்துரையின் பெயரில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரனுக்கு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டுச் சான்று மற்றும் பதக்கத்தை வழங்கினார். இதேபோல் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ்பின்மேரி ஆகியோருக்கும் பாராட்டு சான்றுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மேல்வில்லிவாக்கம் சுவாடு தொண்டு நிறுவனம் மற்றும் இ வித்தியலோக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இணைய வழிக் கல்வி நடைபெறுவதை பாராட்டி பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரனுக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதன் பிறகும் தொடர்ந்து இணைய வழிக் கல்வி செயல்பட்டு வருகிறது. .